November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 4000 ற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் வீடுகளில் இருப்பதாக தகவல்!

இலங்கையில் கொவிட் சிகிச்சை மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்  இன்னமும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக ‘டெய்லிமிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, தற்போது நாட்டில் மொத்தம் 17,795 கொரோனாவா தொற்றாளர்கள் இருக்கின்றனர்.

அவர்களில் 13,043 பேர் மட்டுமே அரசாங்கத்தின் கொவிட்  சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 4,752 கொரோனாத் தொற்றாளர்கள் இன்னும் மருத்துவமனைகள் அல்லது கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படவில்லை என அந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 4,906 நோயாளர்கள் அரசாங்கத்தின் 43 மருத்துவமனைகளிலும், 6,051 நோயாளிகள் 19 கொரோனா சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருவதுடன், 2,086 நோயாளிகள் 13 தனியார் சிகிச்சை நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று வியாழக்கிழமை மொத்தம் 1,895 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில், கொழும்பு மாவட்டத்தில் 326 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 309 பேரும், கம்பஹா மாவட்டங்களில் 279 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2500 படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று இராணுவத்தின் பங்களிப்புடன் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 5 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் பூர்த்தியாகும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.