இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்ற இருப்பதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ள நிலையில், தொற்று அச்சுறுத்தல் அதிகமுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக 12 மேலதிக மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பரீட்சைக்கு செல்வதை அவதானிக்க முடிவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.