November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவசியம் ஏற்படின் நாட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்’; சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள போதிலும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கொவிட் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அத்தோடு சகலருக்கும் தடுப்பூசிகள் ஏற்றும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளை மீறிய விதத்தில் வைரஸ் பரவல் ஏற்படின் தேவைப்படும் பட்சத்தில் நாட்டை முழுமையாக முடக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் பரவி வரும்  கொரோனா வைரஸ் நிலைமைகளை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து கிடைக்க பெற்றுள்ள ஸ்புட்னிக்- 5 கொரோனா தடுப்பூசிகளை நேற்று (வியாழக்கிழமை) தொடக்கம் பொதுமக்களுக்கு ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இந்த மாதம் இறுதி வரையில் தடுப்பூசிகள் ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

கட்டம் கட்டமாக எமக்கு ஸ்புட்னிக் -5 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ள காரணத்தினால் எம்மால் நிலைமைகளை இலகுவாக கையாள முடியும் என நம்புகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் உற்பத்தியான பைசர் தடுப்பூசிகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய ஐந்து மில்லியன் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கவும் பைசர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

எனவே விரைவில் பைசர் தடுப்பூசிகளையும் நாம் பெற்றுக்கொள்வோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிலைமைகளையும் மீறி நாட்டில் வைரஸ் பரவல் காணப்படுமாயின், நிலைமைகள் மோசமடையுமாயின் அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

தேவைப்படின் நாட்டினை முடக்க முடியும். அது குறித்து எதிர்காலத்தில் சிந்திக்க முடியும் எனவும் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.