July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை முடக்காவிட்டால் இந்தியாவின் நிலைமை ஏற்படலாம்’: சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில்  வைரஸ் தொற்று 70 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், உடனடியாக நாட்டை முடக்கி நிலைமைகளை கட்டுப்படுத்தாவிட்டால் மருந்து மற்றும் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு நாட்டின் நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ்  பரவல் நிலைமை குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,

தற்போது நோயாளர்கள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கையானது 70 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் எழுமாறாக பரிசோதனைகள் செய்தால் அதிகளவில் தொற்று நோயாளர்களே அடையாளம் காணப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடும் அளவிற்கு நாட்டின் வைரஸ் தொற்று பரவியுள்ளது என்பதை மறுக்க முடியாது. உடனடியாக நாட்டினை முடக்க வேண்டும் என்பதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துவிட்டோம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ‘செயலணிக் கூட்டங்களிலும் நாம் இதனை உரிய காரணிகளுடன் கூறியுள்ளோம். ஆனால் அரசியல் தலையீடுகள் காரணமாக நாட்டின் சுகாதார நிலைமைகளை கருத்தில் கொள்ளாதுள்ளனர்’ எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை உபுல் ரோஹனவிடம் அரசியல் தலையீடுகளென எதனைக் கூறுகின்றீர்கள்? என வினவியபோது,

‘கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகள் கூட அரசியல்வாதிகளின் தலையீட்டால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல பிலியந்தல பிரதேசத்தில் அரசியல் வாதிகளின் தலையீட்டால் முடக்கப்பட்ட பகுதியொன்று திறக்கப்பட்டது.

வைரஸ் பரவல் நிலைமைகளை அறிந்தே சுகாதார அதிகாரிகள் ஒரு பிரதேசத்தை முடக்கினர். ஆனால் அரசியல்வாதிகள் எமது கட்டுப்பாடுகளை தகர்த்தெறியும் நிலைமை உருவாகியுள்ளது’ எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நோயாளர் அதிகரிப்பினால் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பாரிய அளவிலான பிரச்சினைகள் எழுந்துள்ளன.

எனவே இப்போதே தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாது போனால் விரைவிலேயே மருந்து மற்றும் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும். அதற்கு இடமளிக்கக்கூடாது. எனவே கட்டுப்பாடுகளை அதிகரித்து மக்களின் பயணங்களை தடுக்க வேண்டும்.

அதேபோல நிச்சயமாக பொது முடக்கமே எமக்கு இருக்கும் ஒரே வழிமுறையாகும். உடனடியாக நாம் கட்டுப்பாடுகளை விதித்து இரு வாரகாலமேனும் நாட்டினை முடக்காது போனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகும். மரணங்களும் அதிகரிக்கும்.

இது இந்தியாவின் நிலையை அடையலாம் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.