July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ். மாநகர காவல் படை’ விவகாரம்: 5 உத்தியோகத்தர்களும் விசாரணைக்காக அழைப்பு

யாழ்.மாவட்டத்தில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரத்தினை தூய்மையான நகரமாக பேணுவதற்காக மாநகர சபை ஊழியர்கள் ஐவரும் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

எனினும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சை எழுந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.