October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சைக்கான வைத்தியசாலையை தெரிவு செய்ய வாய்ப்பு

கொரோனா தொற்றாளர்கள் தமக்கான சிகிச்சையை ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பெற்று கொள்வதா? அல்லது ஆங்கில மருந்துகள் முறையிலான வைத்தியசாலைகளில் பெற்று கொள்வதா? என்பது குறித்த முடிவை எடுப்பதற்கு சுதந்திரம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

ஆயுர்வேத மருத்துவமனைகளில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனுமதியை ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே சமீபத்தில் வழங்கினார்.

இதற்கமைய கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நாட்டின் ஆயுர்வேத மருத்துவமனைகளை இடைநிலை சிகிச்சை மையங்களாக  பயன்படுத்துவதற்கான இறுதி முடிவை அறிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அதன்படி, இந்த கூட்டத்தில் ஆயுர்வேத மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கான அடிப்படை பயிற்சியை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழேயே இயங்கும். அத்தோடு இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வாரத்திற்குள் ஆயுர்வேத மருத்துவமனைகளை கொரோனா இடைநிலை மையங்களாக ஆயத்தப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக இரு இராஜாங்க அமைச்சுகளின் பிரதிநிதித்துவத்துடன் ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.