
முதலாவது டோஸாக ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களில் ஆறு இலட்சம் பேருக்கு 2ஆவது டோஸாக மாற்றுத் தடுப்பூசியை ஏற்ற முடியுமா? என்பது குறித்த ஆய்வுகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால், முதலாவது டோஸாக ஒன்பது இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களுக்கு ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு 2 வது டோஸ் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் இரண்டாவது டோஸ் வழங்குவதில் ஆறு இலட்சம் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்தியாவின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளே தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாமைக்கு காரணமாகும் எனக் கூறினார்.
02 ஆம் தடுப்பூசியாக மாற்றுத் தடுப்பூசியை ஏற்ற முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் வெற்றியளித்தால் உடனடியாக பொதுமக்களுக்கு மாற்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா தவிர்ந்து வேறேதும் நாடுகளில் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் எமக்கு கிடைத்து வருகிறன.இந்த ஆண்டு இறுதிக்குள் 130 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கும். ஆகவே பொது மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகளில் எந்தவித தடைகளும் ஏற்படாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.