July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இரசாயன உரங்களை தடை செய்வதால் நாடு பஞ்சத்தை நோக்கி பயணிக்கும்’; ரஞ்சித் மத்தும பண்டார

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவால் நாடு பஞ்சத்தை நோக்கி பயணிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இலங்கையின் நெல் உற்பத்தி 40% வீதத்தினாலும் தேயிலை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய் 50% வீதத்தினாலும், தேங்காய் ஏற்றுமதி வருவாய் 20% வீதத்தினாலும் குறைவடைவதுடன், இலவங்கப்பட்டை ஏற்றுமதி வருவாயிலும் வீழ்ச்சி ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

‘அரசாங்கத்தின் இந்த முடிவுகளின் விளைவாக நாட்டில் பஞ்சம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்த சகாப்தத்திற்கு நாடு செல்ல வழிவகுக்கும்’ எனவும் அவர் கூறினார்.

“காட்மியம் போன்ற சில இரசாயனங்கள் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துவது உண்மைதான்.இருப்பினும் செறிவு குறைந்த காட்மியம் அடங்கிய உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

சேதன உரங்கள் பயன்பாட்டுக்கு மாறுவதற்கான நீண்ட கால திட்டம் தேவை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.