நாட்டில் உள்ள சகல அரசாங்க மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றாளர்களுக்காக பிரத்தியேக வார்டுகளை ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் (புதன்கிழமை) இலங்கையில் 1939 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களுள் 42 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 14 கொவிட் மரணங்கள் பதிவாகின.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனிப்பட்ட முறையில் கள விஜயம் செய்து சிகிச்சை நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள்.
அதேபோல, மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், மேலதிகமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகளுக்கு மிகவும் உயர்ந்த சிகிச்சை வசதிகளை பெற்று கொடுப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா நோயாளர்களுக்காக 50 முதல் 80 வரையான கொரோனா சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அவ்வாறு அண்மைக்காலமாக நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையங்கள் தொடர்பில் உறுதியான அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கவில்லை.
அதேபோல, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றாளர்களுக்காக பிரத்தியேக வார்டுகளை ஒதுக்குமாறு சுகாதார அமைச்சின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் கொவிட்-19 வைரஸுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளிலேயே சிகிச்சை அளித்து வந்தோம்.
ஆனால், தற்போது நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற காரணத்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்திக் கொள்ளுமாறு தெரியப்படுத்தியுள்ளோம்.
எனவே, தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.