இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் 2000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த சில நாட்களாக நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களாக 1500 க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலை தொடருமாயின் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் இரண்டாயிரத்தை கடக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர்வரும் நாட்களில் எம்மால் அவதானிக்க முடியும் என நினைக்கிறேன். இதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை சுகாதார தரப்பினர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை மிக விரைவில் இனங்காணவும், அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில் இந்த நோய் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்களின் பூரண பங்களிப்பினையும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்த விடயத்தை ஒவ்வொரு நாளும் நாங்கள் பொதுமக்களிடம் சொல்லி வருகின்றோம். எனவே அனைவரையும் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், எவருக்காவது கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் இருக்குமாயின் கட்டாயம் வெளியில் வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறான நபர்கள் உடனடியாக அண்மையில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்தை கடந்துவிட்டது. இந்தக் காலப்பகுதியில் எமது நாட்டின் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். இது சாதாரண ஒரு நோயல்ல, இதுவொரு தொற்று நோய்.
எனவே, எதிர்வரும் காலங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு சுகாதார தரப்பினரைப் போல பொதுமக்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.