November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையத்தின் நிர்மாண பணிகள் முடிவடையும் தருவாயில்

நாட்டில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதையடுத்து, கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதனை சமாளிக்கும் நோக்கில், கொரோனா தொற்றாளர்களுக்கு தனி வார்டுகளை அமைக்குமாறு ஆதார வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை)  பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீதுவையில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் மிகப்பெரிய கொவிட்-19 சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த சிகிச்சை மையத்தில் 2500 படுக்கைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 4 நாட்களில் மேலும் 5000 படுக்கைகளை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு இதில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு பல தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை கொண்டுள்ளதாகவும் எந்த நேரத்திலும் 1,200 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.