
கல்முனை பிரதேச செயலகத்துக்கு கணக்காளரை நியமிக்கவும் எல்லைகளை உறுதிப்படுத்தவும் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகள் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் விசேட சந்திப்பு புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே மேற்படி விவகாரம் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டது.
இந்தச் சந்திப்பில் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு அமைச்சால் நியமிக்கப்பட்ட கணக்காளர் கடமையை பொறுப்பேற்காதமையால் உடனடியாக புதிய கணக்காளர் நியமிக்கப்படுவார்.அதேநேரம் தனிப் பிரதேச சபை விடயத்தில் சில இடங்களில் எல்லைகள் தொடர்பான முரண்பாடு காணப்படுகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே, இதனை முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இதனைத் தீர்ப்பதற்காக எல்லை வரையறையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் கையளித்து அதன் பிரதியை அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் கையளிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் விரைந்து தீர்வு எட்டப்படும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.