November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

4000 ஜம்போ ஒக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு நடவடிக்கை

அடுத்த சில வாரங்களில் 4000 புதிய ஜம்போ ஒக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஒக்ஸிஜன் விநியோகத்திற்கு தட்டுப்பாடு இல்லாத போதும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மேலும் ஒக்சிஜன் சிலிண்டர்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

நாடளாவிய ரீதியில் 28 ஆதார வைத்தியசாலைகளில் பாரிய அளவிலான திரவ ஒக்ஸிஜன் கொள்கலன்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் 12 வைத்தியசாலைகளில் திரவ ஒக்ஸிஜன் கொள்கலன்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

நமது நாட்டில் சிலோன் ஒக்ஸிஜன் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 40,000 லீட்டர் ஒக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது. அத்தோடு வடக்கு, கிழக்கில் 9 வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக 3780 லீட்டர் திரவ ஒக்ஸிஜனை தயார் செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு லீட்டர் திரவ ஒக்ஸிஜனில் 860 லீட்டர் திரவ ஒக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஏனவே நாட்டில் தற்போது வரை ஒக்ஸிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எந்த வித தட்டுப்பாடும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்குமானால் அதற்கான தயார் படுத்தலையே தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.எம்மால் முடியாத ஒரு கட்டம் உருவாகுமானால் சிங்கப்பூரிடம் திரவ ஒட்சிசனை பெற்றுக் கொள்வது குறித்து இந்நாட்டு அரசாங்கத்திடம் கலந்தாலோசித்துள்ளோம் என்றார்.