கொரோனா நிலைமைகளை கையாளக்கூடிய புதிய சட்டங்களை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்றி கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டின் சுகாதார நெருக்கடிகளை கையாளக்கூடிய சட்டங்கள் இல்லை.நடைமுறையில் உள்ள நூறு, நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான சட்டத்தினால் தற்போதைய அவசரகால சுகாதார நிலைமைகளை கையாள முடியாது எனவும் அவர் கூறினார்.
கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
வேறு நாடுகளில் அவசரகால நோய் எதிர்ப்பு சட்டங்கள் உள்ளன. இந்தியா, சிங்கப்பூர், இத்தாலி, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் அவசரமாக இந்த சட்டங்களை கொண்டுவந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் எமது நாட்டில் அவ்வாறான நிலையொன்று இல்லை. பொறுப்புள்ள அரசாங்கம் என்றால் இது குறித்த சட்டங்களை கொண்டுவர வேண்டும் எனவும் கூறினார்.
இப்போதும் 100,150 ஆண்டுகள் பழமையான சட்டங்களே நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர். இந்த சட்டத்தினால் தற்போதைய நிலைமைகளை கையாள முடியாது.
புதிய சட்டங்களை கொண்டு வருவதாக நீதி அமைச்சர் கூறினார். ஆனால் இன்னமும் சட்டம் கொண்டுவரப்படவில்லை. ஆனால் துறைமுக நகர சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால் மக்களின் தேவைகள் குறித்து அரசாங்கத்திற்கு எந்த அக்கறையும் இல்லை என்பதேயாகும் என்றார்.
சுகாதார கட்டுப்பாட்டு சட்டமொன்றை உருவாக்க வேண்டுமென நான் தனிநபர் பிரேரணை ஒன்றினை முன்வைத்தேன். ஆனால் அது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. சுகாதார அமைச்சருக்கு எனது யோசனைகளை கொண்டு சேர்த்துள்ளமை நல்ல விடயமே. ஆனால் சட்டத்தை கொண்டுவருவதில் அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளது.
மக்களின் பயணங்களை கட்டுப்படுத்த, தனிமைப்படுத்த சட்டங்கள் இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் இவற்றை கையாள முடியாது. மக்களின் பயணங்களை கட்டுப்படுத்த நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.