November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தினசரி பரிசோதனைகளில் 11 பேரில் ஒருவருக்கு கொரோனா; தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண் மரணம்!

நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில் சராசரியாக 11 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக சுகாதார கொள்கைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில தினங்களாக பதிவாகி வரும் தினசரி கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைகளின் படி இந்த உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்தோடு இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 9 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் சுகாதார கொள்கைகள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் இன்று(புதன்கிழமை)  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ராகமை பகுதியைச் சேர்ந்த 45 வயது கர்ப்பிணி பெண் ஒருவரும் அடங்குகின்றார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் முதல் முறையாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 720 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 922 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 100,075 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை 115590 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 14,795 பேர் கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் 1 வது டோஸ் 928107 பேருக்கும் 2வது டோஸ் 140721 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.