January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவு மாவட்ட நில சுவீகரிப்பை நிறுத்துவதாக சமல் ராஜபக்‌ஷ தமிழ் எம்.பிக்களிடம் உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகவெலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில், இன்று கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பான விசேட சந்திப்பு நடைபெற்றது.

இதன்போதே, முல்லைத்தீவு மாவட்ட மகவெலி நில சுவீகரிப்பு விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள் உட்பட பொறுப்புவாய்ந்தவர்கள் நேரில் பார்வையிட்டு, கருத்தறிந்து இறுதி முடிவு எட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த உத்தரவாதத்தை மீறும் விதமாக மகவெலி அதிகார சபை செயற்பட முனைவதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது, குறித்த பகுதியை தாம் பார்வையிட்டு, விடயம் தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் வரையில், திட்டத்தை இடைநிறுத்துமாறு மகவெலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.