
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவுபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து மக்கள் கடல் கடந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்குரிய வாய்ப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட 11 படகுகள் தடுக்கப்பட்டதாகவும் இதுகுறித்து ஆழ்கடல் மீனவர்களுக்கும் மீன்பிடி சமூகத்தினரும், கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்களும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலில் ரோந்து நடவடிக்கைகளை கடற்படையினர் அதிகரித்துள்ளதோடு, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, யாழ். மாவட்டத்தை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தற்போது 968 குடும்பங்களைச் சேர்ந்த 1995 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.