January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய சைபர் பாதுகாப்பு தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம்

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சைபர் பாதுகாப்பு குறியீட்டு (NCSI) தரப்படுத்தலில் இலங்கை 69 வது இடத்தில் உள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய சைபர் பாதுகாப்பு குறியீட்டு தரவரிசையில் இலங்கை 98 வது இடத்தில் இருந்துள்ள நிலையில், இது 29 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

160 நாடுகளில், இணைய அச்சுறுத்தல்களை தடுக்கவும், சைபர் குற்றங்களை நிர்வகிக்க நாடுகள் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அளவிடும் குறியீடாக தேசிய சைபர் பாதுகாப்பு குறியீடு உள்ளது.

இதேவேளை, உலகளாவிய சைபர் பாதுகாப்பு குறியீட்டில் இலங்கை 83 வது இடத்தையும், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு குறியீட்டில் 117 வது இடத்தையும், நெட்வொர்க் தயார்நிலை குறியீட்டில் 63 வது இடத்தையும் பதிவு செய்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் அறிக்கை தெரிவிக்கின்றது.

தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை CERT நாட்டின் முதல் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் இது தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்துகின்றது.

தேசிய சைபர் பாதுகாப்பு குறியீட்டு (NCSI) இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட குறியீட்டு தரப்படுத்தலின்படி, கிரீஸ் சராசரியாக 96.10 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், தென் சூடான் சராசரியாக 2.60 புள்ளிகளுடன் 160 வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதுவேளை குறித்த தரப்படுத்தலில் சராசரியாக 59.74. புள்ளிகளைப் பெற்று இந்தியா 37 வது இடத்தை பதிவு செய்துள்ளது.

அத்தோடு அமெரிக்கா சராசரியாக 79.22 புள்ளிகளுடன் 16 வது இடத்தையும், ஐக்கிய இராச்சியம் 77.92 புள்ளிகளுடன் 18 வது இடத்தையும் பதிவு செய்துள்ளன.