July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் எம்.பி பாராளுமன்றம் வருவதில் சட்ட ரீதியான தடைகள் இல்லை; சட்டமா அதிபர்

பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள ரிஷாட் பதியுதீனை அனுமதிப்பதில் சட்டரீதியான தடைகள் இல்லை என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சட்ட மா அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி இஷாரா ஜயரட்ன தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனை, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் அனுமதி பெற்று கொண்டுள்ளது.

இந்த நிலையில், ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற அமர்வில் பங்குகொள்ள அனுமதிக்குமாறு, எதிர்க்கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், அதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததால் ரிஷாட் பதியுதீன் எம்.பி இதுவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்படவில்லை.

இதனிடையே, கைது செயய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு எந்தவொரு சட்ட சிக்கலும் கிடையாது என சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைப்பதை தடை செய்யுமாறு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் வைத்து கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.