November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு மில்லியன் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை

இலங்கைக்கு அடுத்துவரும் மூன்று மாதங்களில் ஒரு இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு பைசர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இதனை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

“ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கின்றது. மக்களுக்கு முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றதா? என்பதை ஆராய்ந்த பின்னர் இந்தத் தடுப்பூசி தொகையை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்தது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் ‘சீரம்’ நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைத்திருந்தன.

இதனைத் தொடர்ந்து சீனாவிடமிருந்து 6 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்தன” என்றும் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் ‘பைசர்’ நிறுவனத்துடனும், ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

அத்துடன், ஸ்புட்னிக் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கை 13 மில்லியன் தடுப்பூசிகளையும் பைசர் நிறுவனம் மூலம் 1 மில்லியன் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளது.

இதனிடையே, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.