குற்றப்புலனாய்வு பிரிவில் ஒரு சிலருக்கும், ரிசாத் பதியுதீன் எம்.பி.யின் பாதுகாவல் அதிகாரிகள் ஒரு சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை பாராளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்க முடியாதுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தால் அவரை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
எனினும் ரிசாத் பதியுதீன் சபைக்கு அழைத்து வரப்படவில்லை .இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பி.யுமான லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேள்வி எழுப்பினார். அது தொடர்பில் ஆராய்வதாக சபாநாயகர் கூறினார்.
இந்நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவில் ஒரு சிலருக்கும், ரிசாத் பதியுதீன் எம்.பி.யின் பாதுகாவல் அதிகாரிகள் ஒரு சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை பாராளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்க முடியாதுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர் என சபாநாயகர் தரப்பு கூறியுள்ளது.