July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கில் சிங்கள முதலமைச்சர் ஒருவரை கொண்டு வர திட்டம் என்கிறார் சாணக்கியன்

கிழக்கு மாகாணத்தில் சிங்கள முதலமைச்சர் ஒருவரை கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தில் 20 ஆவது திருத்தத்துக்கு கை தூக்கிய அரசின் கைக்கூலிகளான சில முஸ்லிம் எம்.பி.க்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன்,அதற்கான சூழ்ச்சியே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமிறக்கம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த இரா.சாணக்கியன் எம்.பி. மேலும் கூறுகையில்,

மாகாண சபைக்கான தேர்தல்கள் நடக்குமா? நடக்காதா? என்பது தெரியாத நிலையில், 20 ஆவது திருத்தத்துக்கு கை தூக்கிய அரசின் கைக்கூலிகளான சில முஸ்லிம் எம்.பி.க்கள் கிழக்கு மாகாணத்தில் சிங்கள முதலமைச்சர் ஒருவரை கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாகவே இந்த அரசின் அடிவருடிகளான சில முஸ்லிம் எம்.பி.க்கள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமிறக்கி தமிழ்-முஸ்லிம் மக்களை மோத விடும் சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

முஸ்லிம் மக்களின் தலைவர்களில் ஒருவரான ரிசாத் பதியுதீனை கைது செய்ததற்கு எதிராக இந்த கைக்கூலிகள் குரல் கொடுத்தனரா? அல்லது அசாத் சாலியின் கைதுக்கு எதிராக குரல் கொடுத்தனரா? அல்லது முஸ்லிம் பெண்களின் புர்கா ஆடை மீதான தடைக்கு எதிராக குரல் கொடுத்தனரா? அல்லது மதரஸாக்களை தடை செய்யும் முயற்சிக்கு எதிராக குரல் கொடுத்தனரா?.இல்லை.

கிழக்கில் முஸ்லிம் மக்களுக்காக நாம் எவ்வளவோ விட்டு கொடுப்புகளை செய்துள்ளோம்.அஷ்ரப் வைத்தியசாலையை நாம் எதிர்க்கவில்லை. மட்டக்களப்புடன் நிலத் தொடர்பற்ற கல்வி வலயத்தை நாம் எதிர்க்கவில்லை.இப்படி பல விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளோம். இன்றும் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் கிழக்கில் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றார்கள்.ஆனால் இந்த அரசின் அடிவருடிகளான முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்காத இந்த எம்.பி.க்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்கள முதலமைச்சரை கொண்டுவரத் தயாராகியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.