நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலைமை காரணமாக 15,000 பேர் வரை தமது தொழிலை இழந்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொழிற்துறை அமைச்சுக்கு கிடைத்துள்ள புதிய தரவுகளின் படி இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தொழில்களை இழந்தவர்களின் நலனை உறுதி செய்வதற்கு அரசாங்கமே பொறுப்பு என்றும் தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கும் தமது கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாதவர்களுக்கும் அவர்களின் சம்பளத்தை நிறுவனம் வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,அவ்வாறு வழங்க முடியாத தனியார் துறையினர் தொழிற்துறை அமைச்சுக்கு இது குறித்து அறிவித்து, ஊழியர் தங்கள் வீடுகளில் தங்கியிருந்த காலத்திற்கு மொத்த சம்பளத்தின் பாதியைச் செலுத்துவதற்கான அனுமதியை கோர வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அல்லது ஒரு முதலாளி தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தால், தொழிற்துறை ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும். அல்லது ஊழியர்கள் தொழிற்துறை பணிநீக்க சட்டத்தின் படி முதலாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதன் ஊடாக விசாரணை நடத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே வெளிநாடுகளில் பணிபுரியும் 58,000 பேர் தொழில்களை இழந்த நிலையில் நாடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 30,000 பேர் நாடு திரும்புவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு நாடு திரும்புபவர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்படுவதுடன், அது தொடர்பாக நடைமுறைகள் மற்றும் அனைத்து செலவுகளும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் என்றும் தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.