கொரோனா மரணங்கள் தொடர்பான உண்மைகள் வெளிவருகின்றனவா? என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டை கொடிய பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம் . இப்போது கொரோனா என்ற பயங்கரவாதத்தை எதிர்கொள்கின்றோம் என இப்பிரேரணையை கொண்டு வந்த ராஜித சேனாரத்னவினால் கூறப்பட்டது.
கொரோனாவை பயங்கரவாதமென உலகில் எந்தவொரு நாடும் கூறவில்லை. அது ஒரு கொள்ளை நோய், கொடிய நோய். இவ்வாறான நோயை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான் முக்கியமானதே தவிர, மீண்டும் மீண்டும் ஒரு இனம் போராடிய வரலாறுகளை ஆளும் கட்சியாக இருந்தாலென்ன எதிர்க்கட்சியாக இருந்தாலென்ன பயங்கரவாதமாகவே காண்பிக்க முயல்கின்றன. இது ஐக்கியத்துக்கான வழியல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இடங்களில் இறந்து போவதனை பார்க்கின்றோம். இந்த எண்ணிக்கை தொகையாக இறந்திருந்தாலும் பிரித்து பிரித்தே கூறப்படுகின்றன. இதனால் கொரோனா மரணங்கள் தொடர்பான உண்மைகள் வெளிவருகின்றனவா என்ற சந்தேகம் உள்ளது.
இலங்கையில் கொரோனாவை எதிர்கொள்கின்ற, கட்டுப்படுத்துகின்ற விதம் ஓரளவுக்கு பாராட்டத்தக்கதாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் பிரச்சினைகள் உள்ளன என்றார்.
நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் இராணுவத்திடம் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் உள்ள கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் முகாமுக்கு உள்ளவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை.
ஆவி பிடித்தல்,ரசம் குடித்தலுக்கு அப்பால் மூன்று வேளையும் சோறும் கருவாட்டு துண்டும்தான் வழங்கப்படுகின்றது. விரத காரர்கள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட இவ்வாறுதான் செய்யப்படுகின்றது.
வெளியிலிருந்து உணவு வழங்க இராணுவம் தடை விதிக்கின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இதேவேளை, ரிஷாத் பதியுடீன் அடாத்தாக கைது செய்யப்பட்டிருப்பது புத்த பகவானின் சிந்தனைகளையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. இந்நாட்டில் வாழும் ஏனைய இனங்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை நாட்டில் தொடரும் வரையில், நாடு அதலபாதாளத்துக்கே செல்லும்.
இலங்கையை விட குறைந்த வருமானம் கொண்ட சிங்கப்பூர், ஜப்பானும் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் இலங்கையின் வளர்ச்சி பேரினவாதத்தால் தடுக்கப்பட்டுள்ளது எனவும் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.