
நாட்டில் கொரோனா தொற்றால் 700 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்ததற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இம்மரணங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘கொரோனா முதலாம் அலை பொதுத்தேர்தல் அலையெனவும், கொரோனா இரண்டாம் அலை 20ஆவது திருத்த அலையெனவும் ,கொரோனா மூன்றாம் அலை போர்ட் சிட்டி அலை எனவும் சாணக்கியன் சபையில் சுட்டிக்காட்டினார்.
மேலும், முதல் அலையிலேயே நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுவிட்டது. அதனைத்தொடர்ந்து 2ஆவது, 3 ஆவது அலைகளின்போது அரசு நாட்டை முடக்க மறுப்பதாலேயே அதிக மரணங்கள் நிகழ்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எனவே, இந்த கொரோனா அலைகளால் 700 இற்கு மேற்பட்டோர் மரணமானதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இம்மரணங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சாணக்கியன் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.