இலங்கை அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டதல்ல என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் ஊடக சந்திப்பில் ஜேவிபி தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கிராம மருத்துவரின் தம்மிக மூலிகை மருந்தைப் போன்று, தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் ‘நேற்று’ அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் என்று சுகாதாரத்துறை ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடுவது, மூன்று நாட்களுக்கு முன்னர் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களை ஆகும்.
இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொண்டு 15 மாதங்களாகின்ற போதிலும், ஒவ்வொரு நாளின் நிலைமையையும் கூற முடியாத நிலை தொடர்வது ஆபத்தாகும்.”
கொரோனா நோயாளர்களை சாதாரண வாகனம் ஒன்றில் கொண்டு போன சம்பவம் கவலையளிப்பதாகவும், அம்புலன்ஸ் அல்லது ஒழுங்கான வாகனமொன்றை வழங்க முடியாவிட்டால், கொரோனா தடுப்பு செயலணி ஒன்று எதற்கு? என்றும் மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் 6 தரப்பினர் தகவல்களை வெளியிடுவதாகவும், அவர்களின் தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதாகவும் ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் 24 மணிநேரத்தினுள் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டும் என்றும் மருத்துவத்துறையில் பிசிஆர் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டில்களைத் தயாரிப்பதாக அரசாங்கம் ஊடக கண்காட்சியில் ஈடுபட்டாலும், போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.