May 23, 2025 21:47:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக் கடற்பரப்பில் 86 இந்திய மீனவர்களுடன் 11 மீன்பிடிப் படகுகள் பறிமுதல்!

(Photo : news.navy.lk)

சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 86 மீனவர்களையும் 11 இந்திய மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ளது.

கடல் வழிகள் மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வருபவர்களினால் நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, இதைக் கட்டுப்படுத்த, வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளை அதிகரிப்பதாக கடற்படை அறிவித்திருந்தது.

 

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் வழங்கியுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து 86 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 11 மீன்பிடி படகுகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் எவரையும் தடுக்க கடற்படை தொடர்ந்து வடமேற்கு மற்றும் வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடும் என அறிவித்துள்ளது.