இலங்கையில் 14 மில்லியன் மக்களுக்கு ஏற்றுவதற்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என பத்திக் கைத்தொழில் துறைகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஷ்யாவிடம் இருந்து ஏழரை மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆறு இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சீன தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்தவுடன் அதனை மக்களுக்கு ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்று இடம்பெற்ற பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, கொவிட் -19 நிலைமைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், அரசாங்கமாக பரந்த அளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிலைமைகளை முறையாக கையாண்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், இப்போது வரையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிகளும் நாட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆறு இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவற்றில் மூவாயிரம் தடுப்பூசிகள் சீனர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன.
எஞ்சிய ஐந்து இலட்சத்து 97 ஆயிரம் தடுப்பூசிகள் கைவசம் உள்ளதுடன், தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என்ற அனுமதி கிடைத்தவுடன் அவற்றை நாம் பயன்படுத்த முடியும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.