பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள சபாநாயகர் ஒப்புக்கொண்ட போதிலும், அவர் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்படவில்லை என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியிருந்தார்.
கொவிட்-19 அவசரகால நிலைமை தொடர்பான முழுநாள் விவாதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிகாலையில் பயங்கரவாத தடைச் சடடத்தின் கீழ் கைது செய்திருந்ததோடு, அவரை 90 நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதியைப் பெற்று கொண்டுள்ளனர்.
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களுக்கு அமைய, சபை அமர்வுகளில் ரிஷாட் பதியுதீன் கலந்து கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதியும் சபாநாயகர் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், நடைபெறும் சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பில், அமர்வின் போது எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஏன் பாராளுமன்ற அமர்வுக்கு அழைத்து வரவில்லை என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு சபாநாயகரின் கையொப்பம் தேவைப்படுவதாக சம்பந்தப்பட்ட பிரிவுகள் தெரியப்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக குறித்த கையொப்பத்தையிட்டு அவரை சபைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் கேட்டு கொண்டார்.
அத்துடன், இது தொடர்பாக சபாநாயகரை தான் குறை கூறமாட்டேன் என்றும், கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் வைத்து ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர யோசிக்காமல் இரண்டு தடவைகள் சபாநாயகர் ஒப்புக்கொண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
எது எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து ஆராய்வேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.