May 25, 2025 17:35:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 ஆயிரம் டோஸ் ‘ஸ்புட்னிக்-வி’ கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

இலங்கையின் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 15,000 டோஸ் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR -1668 என்ற சரக்கு விமானத்தில் அதிகாலை 1.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த தடுப்பூசி தொகையினை மருந்து உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றார்.

இவ்வாறு பொறுப்பேற்கப்பட்ட தடுப்பூசிகளை பின்னர் சுகாதார அமைச்சிடம் அவர் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான ரஷ்ய பிரதி தூதுவர் அலெக்ஸி புடனோவ் முதல் தொகுதி தடுப்பூசிகளை இலங்கையிடம் கையளித்தார்.

இதன்போது அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேனவும் கலந்து கொண்டனர்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகளை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

மொத்தம் 13 மில்லியன் டோஸ் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே, இந்த தடுப்பூசிகள், 60 வயதிற்கும் குறைவானவர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.