இலங்கையில் பிசிஆர் பரிசோதனைகளை துரிதப்படுத்தும் உபகரணங்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிசிஆர் பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, பிசிஆர் பரிசோதனைகரள மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு வசதிகளை நான்கு அல்லது ஐந்தாயிரம் வரை அதிகரிக்க குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு செயலணியுடன் கலந்துரையாடி, அவசியமான பிரதேசங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.