சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சிங்கப்பூரின் சட்டம் இலங்கைக்கு முன்மாதிரியானதல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாக்கர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிங்கப்பூரின் சர்வாதிகார சட்டத்துடன் எந்தவொரு ஜனநாயக நாடும் உடன்பட மாட்டாது என்றும் இம்தியாஸ் பாகிர் மாக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூரின் சட்டத்தில் இலங்கைக்கு முன்மாதிரி இருக்கும் என்று நினைத்தால், அது பிரச்சினைக்குரிய விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமாயின், பொதுமக்களிடமும் துறைசார்ந்தோரிடமும் கலந்துரையாடியே, கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.