‘நாட்டின் தேசிய அனர்த்தம் எனக் கருதி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அபாயகரமான இந்தச் சூழ்நிலையில் அரசியல் இலாபம் பெறும் வகையில் சிலர் செயற்படுவது பொருத்தமற்றது’ என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் சரியான முறையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘சிலர் அரசியல் பேதங்களை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகளை போட்டுக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றனரே அன்றி, கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்பது அவர்களின் உண்மையான நோக்கமல்ல என்பது தெளிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாடு மற்றும் மக்களுக்காக கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தால் அது எவருக்கும் முன்னுதாரணமாக அமையும்.
நாட்டில் இப்படியான பிரச்சினை ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையில் அரசியல் இலாபம் பெறும் வகையில் சிலர் செயற்படுவது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படியான ஆபத்தான சந்தர்ப்பத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு, பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் சேவை அனைவருக்கும் முன்னுதாரணமாகும்.
அதேபோல் மக்களும் சுகாதார ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இது அரசியல் நோக்கங்களுக்காக செயற்படும் நேரமல்ல’ என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.