November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்தில் பரவும் வைரஸ் இலங்கைக்குள் எவ்வாறு பரவியது?: ஆய்வுகள் தேவை என்கிறார் வைத்திய நிபுணர்

இங்கிலாந்தில் பரவும் வைரஸ் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இது எவ்வாறு இலங்கைக்குள் வந்தது என்ற கோணத்தில் எவரும் ஆய்வுகளை நடத்துவதாக தெரியவில்லை என வைத்திய ஆய்வுகூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் நாட்டுக்கு வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரரினால் பரவியிருந்தால் இவ்வளவு காலமாக அதனை கண்டறிய முடியாது போனமைக்கான காரணம் என்னவென்ற ஆய்வுகளை முதலில் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

வைரஸ் பரவல் அடையாளம் காணப்பட்ட போதே அதனை ஆய்வுக்கு உட்படுத்தாது விட்டமையே தற்போது மூன்றாம் அலையொன்று உருவாக காரணமாக அமைந்துள்ளது என கருதுகிறேன் என்றார்.

இலங்கையில் சுகாதார தரப்பினர் முன்னெடுக்கும் பரிசோதனைகள் பலவீனமானது என்பதையே இந்த செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றது. எனவே தவறு எங்கே இடம்பெற்றது என்பதை கண்டறிய வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் சகலரும் ஒன்றிணைந்து ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான வைத்தியர் பத்மா குணரத்ன கூறுகின்றார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டின் ஒரு சில பகுதிகளை முடக்கி, ஏனைய பகுதிகளில் மக்களை நடமாட விடுவதாலோ, மக்களாக சட்ட திட்டங்களை பின்பற்றி சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் என கூறுவதாலோ எவரும் முறையாக நடந்து கொள்ளப்போவதில்லை.

அவ்வாறு மக்கள் முறையாக நடந்து கொள்ளும் நிலைமை இருந்திருந்தால் இன்று நாட்டில் வைரஸ் பரவியிருக்க முடியாது. எனவே நிலைமைகளை உணர்ந்து, சுகாதார தரப்பினரின் கருத்துகளுக்கு செவி மடுத்து இறுக்கமான தீர்மானங்களை இந்த நிலையில் எடுத்தாக வேண்டும் என்றார்.

இப்போது பரவும் பிரித்தானிய வைரஸ் ஏற்கனவே பரவிய வைரஸ் போன்றதல்ல. இதன் தாக்கம் அதிகம் என்பதால் மரணங்களின் எண்ணிக்கையே அதிகரிக்கும். இப்போது அது வெளிப்பட்டு வருகின்றது.

சிறுவர், பெரியவர் என வயதெல்லை பாராது சகலரையும் தாக்கும் வைரஸாக இது அடையாளம் காணப்பட்டுள்ள காரணத்தினால் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்து மக்களை வீடுகளுக்குள் முடக்க வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பத்மா குணரத்ன கூறுகின்றார்.