இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 300,000 அதிகமாக பதிவாகிவரும் நிலையில், இந்தியாவுக்கான விமான சேவைகளை பெரும்பாலான உலக நாடுகள் இடை நிறுத்திய அதேவேளை,பயணத் தடையும் விதித்துள்ளன.
எனினும் இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இலங்கைக்கு வருகிறார்கள். இது குறித்து விளக்கம் அளிக்கும் போதே சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை நிறுத்த முடியாது என்றாலும், அதைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா இலங்கைக்கு இடையே கொரோனா கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படும் பிரித்தியேக விமான சேவையில் இலங்கை வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கையில் உள்ள விடுதிகள் இந்திய சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக தற்போது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை இடை நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.