களனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை வழங்கக்கூடிய வகையில் தலைக்கவசம் ஒன்றை தயாரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் மற்றும் கையுறைகளை பின்பற்றுவதை சரியான முறையில் மக்கள் பின்பற்றுவதில்லை. இதனால் கொரோனாவிலிருந்து நூறு வீத பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
இந்த நிலையில் முகக்கவசம் மற்றும் கையுறைகளுக்கு பதிலாக புதிய தொழில் நுட்பத்தை கொண்ட தலைக்கவசம் ஒன்றை களனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த தலைக்கவசம் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது எனவும் ஆராய்ச்சி குழு தெரிவிக்கின்றது.
தலைக்கவசம் முகத்தினை முழுவதுமாக மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும் காற்று வடிகட்டப்பட்டு தலைக்கவசம் வழியாக உள்ளே நுழைய அனுமதிக்கும் என ஆராய்ச்சி குழுவின் உறுப்பினர் ரங்கிக பண்டார தெரிவித்தார்.
அத்தோடு இதில் பொருத்தப்பட்டுள்ள விசிறி அமைப்பு, அணிந்திருப்பவரின் வியர்வையைத் தடுப்பதுடன் கண்ணாடியில் நீராவி படிவதையும் தடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தலைக்கவசத்தில் உள்ள ஐ.ஆர்.சென்சார் அமைப்பு இதனை அணிந்திருப்பவரிடமிருந்து ஒரு மீட்டர் சுற்று வட்டத்தில் அதிக உடல் வெப்பநிலையைக் கொண்ட நபரைக் கண்டுபிடிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தலைக்கவசம் அணிந்திருப்பவர்கள் இலகுவாக உணரும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி குழு மேலும் கூறியுள்ளது.
இதேவேளை, முகக்கவசங்கள் பாவனையால் ஏற்பட்டுள்ள சூழல் மாசடைவையும் இந்த தலைக்கவசம் குறைக்கும் என ஆராய்ச்சி குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.