November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு வரும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிகள்; முதலில் யாருக்கு வழங்கப்படும்?

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி இன்று (திங்கட்கிழமை) இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அறிவித்ததுக்கு அமைய, முதல் தொகுதியாக 15 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசிகள் மேல் மாகாணத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலும் 2 இலட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை ரஷ்யா இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொவிட் -19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு தேசிய ஒளடத  ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மார்ச் 4 அன்று ஒப்புதல் அளித்தது.

மொத்தமாக 13 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.

பின்னர், தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை மார்ச் 23 அன்று ஒப்புதல் அளித்தது.

இதன்படி ஒவ்வொரு தடுப்பூசியும் 9.95 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட உள்ளது.

தடுப்பூசிகள் ஒருவருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு டோஸ் அளவில் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், கொரோனா வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் 91.6 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

இதனிடையே இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஜனவரி மாதம் முதல் 9 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு முதலாவது டோஸாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான இரண்டாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.