
இலங்கையின் அரச மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாட்டின் தொற்று நோய் தடுப்புப் பிரிவில் தகவல்களை ஒன்றுதிரட்ட முறையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து மாகாண மற்றும் மாவட்டங்களுக்கும் தொற்று நோய் சார் மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ளும் விதத்தில் மருத்துவமனைகளை தயார் செய்தல், சுகாதார வழிகாட்டல்களை முறையாக அமுல்படுத்தல், தடையின்றி தடுப்பூசி வழங்குதல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.