January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹோட்டல் சேவைகளுக்கான கட்டணங்களை அமெரிக்க டொலர்களில் ஏற்பதற்கு நிதி அமைச்சு ஒப்புதல்

இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு அமெரிக்க டொலர்களில் அவர்களின் சேவைகளுக்கான கட்டணங்களை ஏற்பதற்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

நிதியமைச்சராக, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வழங்கப்படுகின்ற சேவைகளுக்காக இலங்கை குடியிருப்பாளர்களிடமிருந்து டொலர் கொடுப்பனவுகளை ஏற்க ஹோட்டல்களுக்கு அனுமதி உண்டு. இலங்கையர்களின் கைவசம் உள்ள வெளிநாட்டுப் பணத்தை வங்கி முறைக்கு ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சில காலங்களாக கடவுச்சீட்டை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களிடம் இருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளும் சேவைகளுக்கு டொலர்களில் கொடுப்பனவை செலுத்த முடியும்.

அத்துடன், இந்தப் புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, இலங்கையர்களிடம் உள்ள டொலர்களை ஹோட்டல் பற்றுச்சீட்டு மற்றும் பிற கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தலாம்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தரவிற்கு அமைய, ஒரு இலங்கையர் வைத்திருக்கக்கூடிய டொலர்களின் பெறுமதியை 10,000 முதல் 15,000 வரை உயர்த்தியுள்ளது.

அதேபோல, மத்திய வங்கியின் மூலம் வணிக வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்ட அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக 2 சதவீத வட்டியையும் மத்திய வங்கி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.