
“தற்போது நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியாவை போன்று நெருக்கடியான சூழ்நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்“ என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாங்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் ஆபத்தான காலத்தை எதிர் கொள்ள உள்ளதாகவும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்ம குணரத்ன தெரிவித்தார்.
எனவே கொரோனா கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப நாம் எமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இந்தியாவை போன்று மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
தமது வீடுகளில் ஏதாவது ஒரு நோயாளி இருந்தால், வீட்டிலுள்ள அனைவரும் முகக்கவசங்களை அணிவது முக்கியம் என அவர் கூறினார்.
ஒரு சமூகமாக நாம் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை பின்பற்றி தொற்றைக் கட்டுப்படுத்த முடிவு செய்யாவிட்டால், இந்தியாவின் நிலைமை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இலங்கைக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.