January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘திங்கட்கிழமை முதல் 25% தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடும்’

நாளை (திங்கட்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் 25% தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக வகுப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அலுவலகங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் அழைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக பஸ்களின் எரிபொருள் செலவிற்கேனும் போதுமான வருமானத்தை ஈட்ட முடியாத நிலைக்கு பஸ் உரி மையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாளை (திங்கட்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் 25% பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடிவெடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதனிடையே பஸ் சேவையை மட்டுப்படுத்த இலங்கை போக்குவரத்து சபையும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், பல ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமையினாலும் இலங்கை போக்குவரத்து சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றது.

எனினும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகாத நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை உறுதி அளித்துள்ளது.