July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தம்மிக்க பண்டாரவின் ‘மூலிகைப் பாணி‘ கொரோனா தொற்றை குணப்படுத்தாது; ஆய்வில் முடிவு

நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவினால் கொரோனா தொற்றை குணப்படுத்தும் என கூறி தயாரித்து வழங்கப்பட்ட ‘மூலிகைப் பாணி கொரோனாவுக்கு பலனளிக்கவில்லை என சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டார கொரோனா தொற்றை குணப்படுத்துவதாக கூறி ‘மூலிகைப் பாணி‘ ஒன்றை பகிர்ந்தளித்தார்.

இந்த பாணியை சுகாதர அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டோர் உட்கொண்டதையடுத்து அது இலங்கையில் அதிகமாக பேசப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்புப் பாணியை ஆய்வு செய்யவென சுகாதார அமைச்சினால் மருத்துவ ஆலோசகர் சேனக பிலப்பிட்டிய தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது.

சிறப்புக் குழுவின் பரிந்துரைக்கு அமைய ரஜரட்ட பல்கலைக்கழகத்தால் அனுராதபுரம் மருத்துவமனையில் உள்ள 68 கொரோனா நோயாளிகளுக்கு இந்த பாணி வழங்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனையில், தம்மிகவின் மூலிகைப்பாணி வழங்கப்பட்ட COVID 19 நோயாளர்களிடையே எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் வைத்தியர் சேனக பிலப்பிட்டி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நோய்த் தடுப்புப் பாணிக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் மருந்தியல் பிரிவின் ஒப்புதல் வழங்கப்பட்டது. எனினும் கொரோனா தடுப்புக்கான மருந்து என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த பாணி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அனைவரும் தம்மை கைவிட்டதாக தம்மிக்க பண்டாரா அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.