தமிழ்-முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தெரிவித்துள்ளன.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை உறுதிப்படுத்தியதுடன்,மாகாண சபை தேர்தல் தொடர்பாக பல விடயங்கள் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
மாகாண சபை தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல் ஒன்று இருக்கிறது.அந்த சட்டம் மாற்றப்படவேண்டும். தேர்தல் முறையை என்னவிதமாக அமைப்பது என்பது குறித்து அரசாங்கத்துக்குள்ளேயே பாரிய கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.எனவே இந்த விடயங்களை கூறிக்கொண்டு தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறது. அதனைவிட,அரசாங்கம் இன்று மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கை இழந்திருக்கிறது.ஆகவே இப்பொழுது தேர்தலை நடத்தினால் தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற அச்சமும் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.
மேலும்,மாகாண சபை தேர்தல் நடைபெறும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றும்.அதில் நாங்கள் திடமான நம்பிக்கையை கொண்டிருக்கிறோம்.தமிழ் மக்கள் மாத்திரமல்ல,தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பாரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.ஆகையால்,இந்த விடயம் சம்பந்தமாக முஸ்லிம் கட்சி தலைவர்களுடனும் நாங்கள் பேசியிருக்கிறோம்.தமிழ் பேசும் மக்களாக நாங்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணமும் தமிழ் பேசும் மாகாணம் என்ற அடையாளத்தை பேணும் வகையில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில்,கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்-முஸ்லிம் தரப்புகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது சம்பந்தமாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதை தங்களுடைய கட்சி சாதகமாக பரிசீலிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை தமிழ் பேசும் மக்கள் கைப்பற்றவேண்டிய தேவை இருப்பதனால் தமிழ்-முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும்,இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்த நிசாம் காரியப்பர்,இந்த விடயத்தை சாதகமாக பரிசீலிப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.