January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் ‘கை வாய் பாதம் நோய்’ ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

(Photo : sciencenews.org)

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு மத்தியல் சிறுவர்களிடையே பல நோய்கள் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின்  சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

டெங்கு நோயை போன்று வைரஸ் காய்ச்சலை போன்று எல்லாக்காலப்பகுதியிலும் ‘கை வாய் பாதம் நோய்’ ( Hand Mouth Foot disease- HFMD) யும் சிறுவர்களிடையே பெருமளவில் காணக்கூடியதாக இருப்பதாக விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

உலகில் பல நாடுகளில் காலத்துக்கு காலம் இந்த நோய் காணக்கூடியதாக உள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்த நோய் கொரோனா தொற்று அல்ல எனவும் வைத்தியர் தெளிவுபடுத்தினார்.

தாய்ப்பால் வழங்கப்படும் 6 மாத காலப்பகுதியில் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படாது.

குறிப்பாக 6 மாதங்களுக்கு மேற்பட்ட மற்றும் 5 முதல் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் இந்த நோய் அதிகமாக ஏற்படுவதாகவும் 10 வயது வரையிலுமான சிறுவர்கள் மத்தியில் இந்த நோய் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசேடமாக இந்த நோய் சிறுவர்களிடையே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மிக விரைவாக தொற்றும் தன்மை கொண்டது என்பதால் நோய் தொற்றுக்குள்ளான சிறுவர்களை ஏனைய சிறுவர்களில் இருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனவும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தினார்.

முதல் 2 தினங்கள் மாத்திரம் காய்ச்சல் நிலை ஏற்படுவதுடன், காய்ச்சல் குறைவடைந்த 7 தொடக்கம் 10 தினங்களில் கைகள், வாயைச்சுற்றியும், வாய்க்குள்ளும் கால்களிலும் சிகப்பு நிற புள்ளிகளை காணக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதன்போது நோய்த் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே உடல் சோர்வு, உணவில் வெறுப்பு, இயலாமை போன்ற நிலைமைகளை காணக்கூடியதாக இருக்கும். இதனால் நீரிழப்பு நிலைக்கும் சிறுவர்கள் தள்ளப்படுவார்கள் என வைத்தியர் தெரிவித்தார்.

இதன் போது, சிறுவர்களுக்கு திரவ உணவு வகைகளை வழங்க வேண்டும். நிறைக்கு ஏற்ற அளவில் பெரசிட்டமோல் மாத்திரைகளை மாத்திரம் வழங்க வேண்டும் எனவும் வைத்தியர் ஆலோசனை வழங்கினார்.

நோய் குணமடைந்த பின்னர் கை, கால்களிலுள்ள நகங்கள் கழன்று போக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்கு சிகிச்சை மேற்கொள்வதுடன் சிறுவர்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு 3 நாட்களுக்கு காய்ச்சல் இருக்குமாயின்  பரிசோதனை மேற்கொண்டு நோய் நிலைமை டெங்கா? என்பதை கண்டறிய முடியும். அல்லது ‘கை வாய் பாதம் நோய்’ தொற்று ஏற்பட்டிருப்பின் சிறுவர்களை தனிமைப்படுத்தி ஓய்வாக வைத்திருப்பது அவசியமாகும் என்றார்.

இந்த நோயை சிறுவர்கள் மத்தியில் கொண்டு செல்வது பெரியவர்களே என குறிப்பிட்ட அவர், கொவிட் நிலைமையை போன்றே  கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசங்களை முறையாக அணிதல் முதலானவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கைகளை சுத்தமாக வைத்திருப்பதினால் கூடுதலான வைரஸ்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் இது வயதானவர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.