November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை இரசாயன உர பயன்பாடு இல்லாத உலகின் முதலாவது நாடாக மாற்ற ஜனாதிபதி திட்டம்

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை முழுமையாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

உலகில் எந்த ஒரு நாடும் இரசாயன உரங்களின் பயன்பாட்டிலிருந்து நீங்காத நிலையில் அந்த இலக்கை அடைவதில் இலங்கைக்கு எந்த தடையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களை கொல்லிகள் பயன்பாடு மற்றும் இறக்குமதி மீதான தடை குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்த இலக்கை அடைய விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

“நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் இலங்கையில் விவசாயத்திற்கு முழுமையாக சேதன உரங்களைப் பயன்படுத்த அந்த உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும். ” என “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கை பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டதுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இரசாயன உர இறக்குமதிக்காக இலங்கை 2019 இல் 221 மில்லியன் டொலர்களை செலவிட்டது. எண்ணெய் விலை அதிகரிப்புடன், அந்த செலவு 300-400 மில்லியன் டொலர் வரை அதிகரிக்கும். இரசாயன உரங்கள், களை கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றிற்கு பெரும் செலவு செய்த போதிலும், விவசாய உற்பத்தியில் தரமான அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திட்டத்தின் தொடக்கத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை ஒப்புக் கொண்டாலும், நிலையான பசுமை சமூக-பொருளாதார முறையை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

மாவட்ட மட்டத்தில் சேதன உர உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நேரடியாக தலையிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட்டு விடுவது உற்பத்தியைக் குறைக்கும் என்று விவசாயிகள் நினைக்கலாம். அப்படியானால், இரசாயன உர மானியத்திற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் ரூ .50 பில்லியனில் இருந்து குறையும் வருமானம் ஈடு செய்யப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.