October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திரையரங்குகள்,சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு; கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் இரவுநேர கேளிக்கை நிகழ்வுகள் போன்றவற்றுக்கு இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடைகள், சிறப்பு அங்காடிகள் மற்றும் துணிக்கடைகளில் 25 வீதமானவர்களே அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஒரு நேரத்தில் உள்ளே இருக்கக்கூடிய அதிகபட்ச எண்ணிக்கையை வெளியில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடையின் உள்ளே இருக்கும்போது இரண்டு நபர்களிடையே ஒன்றரை மீட்டர் இடைவெளி பேணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டங்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து ஒன்று கூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆலயங்கள், கலாச்சார மற்றும் திருமண நிகழ்வுகளில் மக்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
நீச்சல் தடாகங்கள், பார்கள், இரவு விடுதிகள், பப்கள், பந்தய மையங்கள் என்பவற்றுக்கு மறு அறிவித்தல்வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இசைக்கச்சேரிகள், திருவிழா மற்றும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் 25 வீதமானவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலைகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனைத்து  பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொவிட்-19 அல்லாத மரணங்களின் இறுதி சடங்குகள் 24 மணி நேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மரணங்களின் இறுதி சடங்கு நிகழ்வில் 25 பேர் மாத்திரமே பங்குகொள்ள முடியும் எனவும் சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதம் 04 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை திருமண நிகழ்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மே 1 ஆம் திகதி முதல் நமை முறைப்படுத்தப்படும் இந்த விதிமுறைகள், இம்மாதம் 20ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன் பின்பு கொரோனா தொற்று நிலைமையைப் பொருத்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.