இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில்,ஒக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் சிலின்டர்களை பயன்படுத்தி வழங்குவதைவிடவும், திரவ ஒக்ஸிஜன் கொள்கலனிலிருந்து குழாய் மூலம் வழங்குவதே சிறந்த வழி என இலங்கை விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கையில் துரதிர்ஷ்டவசமாக 28 திரவ ஒக்ஸிஜன் கொள்கலன்களே மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஏ.ஜே.எல் பெர்னாண்டோ ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.
மேலும் 3,000 முதல் 20,000 லீட்டர் வரை கொள்ளளவுடைய 28 கொள்கலன்கள் இரண்டு மட்டுமே 20,000 லீட்டர் கொள்ளளவு உடையன எனவும் அவர் கூறினார்.
இவற்றில் ஒன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மற்றொன்று பேராதெனிய போதனா வைத்தியசாலையிலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த மருத்துவமனைகளில் வேறு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதால், கொரோனா நோயாளர்களை அங்கு அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே திரவ ஒக்ஸிஜன் அடங்கிய பெரிய சிலின்டர்களே இப்போது பயன்படுத்த முடியும். 47 லீட்டர் திரவ ஒக்ஸிஜனை கொண்ட ஒரு சிலின்டரை பயன்படுத்தி 7,050 லீட்டர் ஒக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு இந்த சிலின்டர்களை நகர்த்துவதற்கு இரண்டு பேர் தேவைப்படுவதாகவும் இவற்றின் முலம் சில மணி நேரங்களே நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்க முடியும் என தெரிவித்த அவர், ஒக்ஸிஜன் உற்பத்தியை வைத்தியசாலைகளில் நிர்வகிப்பதே இப்போதைய சூழ்நிலையில் சிறந்தது என்றார்.
இதனிடையே நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களால் ஏற்படக்கூடிய நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் எந்தவொரு மூலோபாயத்தையும் நடைமுறைப்படுத்துவதை தமது சங்கம் காணவில்லை என அவர் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு பிரத்தியேக சிகிச்சை எதுவும் இல்லாத போதிலும் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவின் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவது முக்கியமானது.
எனவே கொரோனாவால் ஏற்படும் பேரழிவைத் தவிர்க்க வேண்டுமானால் ஒக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவின் படுக்கைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தினார்.