
மாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மகளிர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மகளிர் அமைப்பின் மே தின ஒன்று கூடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெண்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற வைக்க வேண்டும் என்பதே உழைக்கும் மகளிர் அமைப்பின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திலும் பெண் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இம்முறை தமிழ் பெண்கள் எவரும் பாராளுமன்றம் செல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை தமிழ் பெண்களில் ஒருவரேனும் பாராளுமன்றம் செல்லாதது குற்றச்சாட்டாக காணப்படுவதாகவும் உழைக்கும் மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.
“யுத்த காலத்தில் இருந்து பெண்களாகிய நாம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். பெண்கள் பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
எனவே, பெண்களாகிய நாமே பாராளுமன்றம் மற்றும் ஏனைய சபைகளுக்கு செல்ல வேண்டும். அதன் மூலம் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும்.
அனைத்து தமிழ் கட்சிகளும் பெண்களுக்கு தேர்தலில் 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பதே எமது மே தின கோரிக்கையாகும்”
என்றும் உழைக்கும் மகளிர் அமைப்பின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.