July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா சிகிச்சைக்காக ஜோன் கொத்தலாவல வைத்தியசாலையில் 3 அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஸ்தாபிப்பு

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலையில் மூன்று அதி தீவிர சிகிச்சை பிரிவுகளை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய அதி தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைகளுக்கான 24 கட்டில்களும், 12 அதி தீவிர கண்காணிப்பு கட்டில்களும் தயார் நிலையில் இருக்கும் என அறிக்கை ஒன்றினூடாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி  விசேட கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

இதன்போது, அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்காக 30 வைத்தியர்களையும், 80 தாதியர்களையும், 25 கனிஷ்ட சுகாதார ஊழியர்களையும் நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் அதி தீவிர சிகிச்சைக்கான வசதிகளை மேலும் விரிவுபடுத்தவும் சுகாதார அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.