தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து 21 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதோடு, கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கைச்சாத்திட்ட கோரிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊழியர் சங்கத்தின் செயலாளர் லெஸ்லி தேவேந்திரவினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
பிரதமர் மகிந்த, தொழில் அமைச்சராக ஏற்படுத்திய தொழிலாளர் சாசனத்தின் ஊடாக இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு செய்த சேவையையும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பையும் தொழிற்சங்க தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
மேலும், ‘சுதந்திரத்துக்காக ஒன்றிணைவோம்- சவால்களை வெற்றிகொள்வோம்’ என்ற தலைப்பிலான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் உரிமைகள் உட்பட 21 யோசனைகள் இதில் உள்ளடங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.